11th Dec 2021
என் பெண்ணும் தம்பி/தங்கை குழந்தைகளும் எனக்கு மட்டும் ஏன் கணக்கு அதிகம் பிடிக்கிறது என்று பலமுறை கேட்டு உள்ளனர். அப்பொழுதெல்லாம் பள்ளியில் எனக்கு கணக்கு சொல்லிகொடுத்து அதில் ஆர்வம் அதிகம் வர காரணமான ஆசிரியர் திரு வீரராகவன் ஐயங்கார் அவர்கள் பற்றி கூறுவேன்.
அவர் போட்ட அடிதளம்தான் நான் பள்ளியில் elective subject ஆக கணக்கை தேர்வு செய்ததும் B.Sc (Maths) படித்ததும்.
அவர் நாங்கள் இருந்த தெருவிலேயே 8 வீடு தள்ளி இருந்தார். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் தெரியும்.
பள்ளி படிப்பு முடிந்து வெளிவந்தபின் ஒரிரு முறையே அவரை பார்த்திருக்கிறேன். 1982க்கு பின் ஊரைவிட்டே சென்றபின் பார்க்கவே இல்லை.
இரு நாட்கள் முன் கடலூர் வழியே போகவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. கடலூர் அருகில் இருக்கும் திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமியை (திருப்பதி வெங்கடாஜலபதி அண்ணா) தரிசித்துவிட்டு செல்லலாம் என தோன்றியது. ஆசிரியர் தற்போது திருவந்திபுரத்தில் தான் இருப்பதாக கேள்விப்பட்டு அவரின் மகனுக்கு போன் செய்து கேட்டேன். அவனும் அவன் அப்பாவும் அங்குதான் இருப்பதாகவும் வரும்படியும் அவனே கோவிலுக்கு கூடவருவதாக அழைத்தான்.
கோவில் அருகில் அவர்கள் வீடு. வாசலிலேயே காத்திருந்து கோவிலுக்கு அழைத்து சென்று எல்லா சன்னதிகளிலும் சிறப்பு தரிசனம் செய்து வைத்தான்.
பின் அவர்கள் வீட்டிற்கு சென்று ஆசிரியரை வணங்கி பார்த்து பேசினேன். அவரும் மாமியும் அன்புடன் வரவேற்றனர். அவர் வயது 93 ஆனாலும் பழைய அதே கம்பீரமான குரல். சிறந்த நினைவாற்றல். பழைய நினைவுகள், அப்போதைய ஆசிரியர்கள் பற்றி, சங்கரமடம் நிகழ்ச்சிகள், ஸ்வாமிகள் வரவில் அவர்பங்கு, நவராத்தி விழா என நிறைய பேசி நினைவுகூர்ந்தார். சுமார் 30 நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். மாமியும் என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பற்றிய நினைவுகளை கூறினார். வயதான காலத்தில் அவர்களை மதித்து வந்து சிறிது நேரம் பேசியதில் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
அவர்களை நமஸ்கரித்து விடைபெற்றோம். மிகவும் சிறப்பான நாளாக அமைந்தது.
No comments:
Post a Comment