Wednesday, September 16, 2009

நெஞ்ச‌ம் ம‌ற‌ப்ப‌தில்லை

வ‌ருடங்க‌ள் ப‌ல‌ ஆனாலும் வ‌ய‌து ஏறினாலும், அம்மா அம்மா தான்.

பிறந்த குழந்தைக‌ள் பேச‌ ஆர‌ம்பிக்கும் முத‌ல் மொழி அம்மா என‌ இருக்கும்.
என் வாழ்வில் எப்ப‌டி இருந்த‌தென்ப‌து என‌க்கு நினைவு இல்லை. சித்த‌ப்பாக்க‌ளும், அத்தைக‌ளும், அக்காவும், "ம‌ன்னி" என்று அழைக்க‌, ச‌ந்த‌ர்ப்ப‌ சூழ்நிலை நினைவு தெரிந்த நாள் முத‌ல் உன்னை ம‌ன்னி என்றும், அப்பாவை அண்ணா என்றும் அழைக்க‌ வைத்த‌ன‌


அண்ணாவோ, ம‌ன்னியோ உங்க‌ள் அன்பு குறைய‌வில்லை

உண்ண‌ ஆர‌ம்பித்த நாட்க‌ளில், உன் த‌ட்டிலிருந்து, ஒரு உருண்டை ப‌ருப்பு சாத‌ம் சாப்பிட்ட நாட்க‌ள் நெஞ்சில் நிறைகிற‌து.

ப‌ள்ளி சென்ற நாட்க‌ளில், த‌லை சீவுத‌ல் முத‌ல் பென்சில் சீவுத‌ல் வ‌ரை உன் உத‌வியை எதிர்பார்த்து நின்றேன் -- முக‌ம் கோணாம‌ல் நீயும் செய்தாய்.

போட்டுக் கொள்ள‌ ச‌ட்டை/டிராய‌ர் -- அனைவ‌ருக்கும் ஒரே மாதிரி தைத்து த‌ந்து -- ச‌ம‌த்துவ‌த்தை போதித்தாய் -- ச‌ம‌ய‌த்தில் உத‌வுகிற‌து

தாய் பாச‌த்தை த‌ன‌க்குள் வைத்துக்கொள்ளாம‌ல், ப‌டிக்கும் கால‌த்தில், தாத்தா/பாட்டி யுட‌ன் ப‌கிர்ந்துக்கொள்ள‌ வ‌ழி செய்தாய் --- ப‌டிக்க‌வும் முடிந்த‌து -- பாச‌ம் என்றால் என்ன‌வென்றும் தெரிந்துகொள்ள‌ முடிந்த‌து.

விடுமுறை நாட்க‌ளில் உங்க‌ளை தேடி ஓடி வ‌ந்த‌ போது, இனிக்க‌ பேசினாய், உணர்ச்சிகளை காட்டினாய்.
உட‌னிருக்கும் ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ளை விட -- உரிமை அதிக‌ம் எடுக்க‌, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் உற‌ங்கிய‌பின் உட‌னிருந்து அமைதி ப‌டுத்தினாய்.


ப‌டிக்க‌ திரும்பும் நாளில் -- பொங்கிவ‌ரும் துக்க‌த்தையும், அட‌க்க‌முடியாத‌ அழுகையையும் -- அர‌வ‌ணைத்து த‌டுததாய், அழுத‌ முக‌ம் மாற்றினாய்.

ஏட்டு பாட‌ம் ம‌ட்டும் இன்றி -- உல‌க‌ பாட‌ம் க‌ற்று த‌ந்தாய்.
அந்த நாள் பாட‌ங்க‌ள் இன்றும் ம‌னதில் உள்ள‌து --- உண்மையாக‌ உத‌வுகிற‌து.
வேண்டும் பொருள்க‌ளை, ஏட்டினிலே எழுதி வைக்க‌ சொன்னாய் -- எழுதிய‌வை அனைத்தும் என்னை வ‌ந்து அடையும் போது -- எண்ணிலா ம‌கிழ்ச்சி கொண்டேன் -- எப்ப‌டி முடிகிற‌து என்று இன்றுதான் புரிகிற‌து __ எழுதிய‌ எழுத்துக்கு எந்த‌ள‌வு வ‌லிமையுண்டு என‌ --- எவ்வ‌ள‌வு எளிதாக‌ அறிந்து நீ புரிய வைத்தாய்.


நல்ல‌ க‌ன‌வுக‌ள் அனைத்தும் ந‌ன‌வாகும் -- எவ்வ‌ள‌வு பெரிதானாலும் -- என்று உண‌ர்ந்து எடுத்துரைத்தாய், ந‌ட‌த்தி காட்டினாய் எங்க‌ளுக்கு. ஆம் தேவ‌னாம்ப‌ட்டின‌ம் dream house ப‌ற்றிதான் கூறுகிறேன்
இவ்வ‌ழியை க‌டைபிடிப்பேன் என்றென்றும், என‌க்காக‌ ம‌ட்டும் அல்ல‌ அனைவ‌ருக்காக‌வும் -- எல்லாவ‌ற்றையும் அடைவேன், ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து வாழ்வேன்.

க‌ஷ்ட‌ங்க‌ள் ப‌ல‌வானாலும், க‌டுக‌ள‌வும் தெரியாம‌ல் இன்முக‌ம் காட்டி செம்மையாக‌ கையாண்டாய், இம்மிய‌ள‌வும் குறைவின்றி.
அறிந்து கொண்டேன், நினைவில் கொண்டேன் -- எத்த‌கைய‌ Management technique என்று.

வாழ்க்கையின் உண்மைக‌ள் உண‌ர‌ ம‌ற்றும் த‌ர‌ம் உய‌ர‌ ஆர‌ம்பிக்கும் வேளையில்
பெரிய‌தோர் இடி விழுந்த‌து __ த‌ந்தையின் ம‌ர‌ணம்.
எப்ப‌டியெல்லாமோ சீரும் சிற‌ப்புமாக‌ உங்க‌ளை வைக்க வேண்டும் என்ற‌ எண்ண‌ம் -- ஆகிய‌து த‌விடு பொடியாக‌.
நாங்க‌ள் எல்லாம் இடிந்து இருந்த‌ போது, ந‌ம்பிக்கையாய் நீ இருந்தாய் எல்லோருக்கும்
த‌ன் த‌விப்பு தான் ம‌ற‌ந்து, தானாக‌ முன்வ‌ந்து பொறுப்புக‌ளை நீ ஏற்றாய், பொறுமையுட‌ன் சொல்லி த‌ந்தாய் __ ம‌க்க‌ளையும் பொருள்க‌ளையும் கையாளுவ‌து எப்ப‌டியென்று.
உன்னிட‌ம் க‌ற்ற‌து ப‌ல‌, வார்த்தையில் வெளிவ‌ர‌வில்லை __ ம‌ன்னிப்ப‌து, ம‌ற‌ப்ப‌து, உத‌வுவ‌து, பொறுப்பேற்பது, ம‌கிழ்விப்ப‌து, அர‌வ‌ணைப்ப‌து, ஆறுதல் அளிப்ப‌து போன்ற‌ குணாதிஸ்ய‌ங்க‌ள், குறைவின்றி அறிய‌ வைத்தாய்.


ம‌ற்றும் ஒரு ந‌ல்ல‌ வ‌ழ‌க்க‌த்திற்கு நீ தான் வித்திட்டாய் ந‌ம் குடும்ப‌த்தில்
பிற‌ந்த‌ நாட்க‌ளிலும், ந‌ல்ல‌ நாட்க‌ளிலும் ஆசீர்வாத‌த்துட‌ன் வெகும‌தியும் நீ த‌ந்தாய்.
கொடுக்கும் பொருள் சிறிதானாலும், சீரிய‌ ம‌ன‌து பெரிதான‌து __ இனி வ‌ரும் நாட்க‌ளில் யார் த‌ருவார் எங்க‌ளுக்கு?


அலுவ‌ல‌க‌ குடியிருப்பு, சிறிது நாள் சொந்த‌ சிறிய‌ வீடு, ந‌டை ப‌ய‌ணம் என்றிருந்த‌ வாழ்க்கையை -- சிறித‌ள‌வு உய‌ர்த்தினோம் உன் உத‌வியால்.
த‌ந்தை காண‌வில்லை என்றாலும், உன் க‌ன‌வை நினைவாக்கினோம். த‌லைந‌க‌ர் தில்லியில் த‌னித‌னி வீடுக‌ள், சிறிய‌ பெரிய‌ கார்க‌ள், வித‌வித‌மாய் துணிம‌ணிக‌ள், ப‌ட்டொளி வீசும் ந‌கைந‌ட்டுக‌ள் என்று ந‌ல்ல‌ வாழ்வு நாங்க‌ள் தொட‌ங்க‌, நிம்ம‌தியும் பெருமையும் ப‌ட்டாய் நீ __ த‌ன் ம‌க்க‌ள் சிற‌ந்த‌வ‌ர்க‌ளென்று.

இந்நாளிலும் நீ சொன்னாய், ப‌ழைய‌தை ம‌ற‌க்காதே, செருங்குணம் அடையாதே___ என்றென்றும் ம‌ன‌தில் நிலையாக‌ இருக்கும்ப‌டி
முத்திரையிட்டாய்

தான் பெற்ற‌ குழ‌ந்தைக‌ள் ம‌ட்டும் அல்ல‌, உன‌க்கு வ‌ந்த‌ ம‌ரும‌க‌ள்க‌ள் ம‌ற்றும் ம‌ரும‌க‌ன்க‌ள் ஒவ்வொருவ‌ரும் தேடி எடுத்த‌ வைர‌ங்க‌ள், வைடூரிய‌ங்க‌ள், ந‌ன்முத்துக்க‌ள், ப‌வ‌ழங்க‌ள், என வீடே வெகும‌தியான‌து __ நீ செய்த‌ புண்ணிய‌மோ யார் செய்த‌ நல்வினையோ?
தொட‌ர்ந்து வ‌ந்த‌ன‌, தெவிட்டாத‌ குழ‌ந்தைக‌ள். ஒவ்வொன்றின் மீது நீ வைத்த‌ அன்பு சொல்ல‌ முடியாத‌து, அள‌க்க‌ முடியாதது
அந்த‌ குழ‌ந்தைக‌ள் நீ இன்றி விழிக்கின்ற‌ன‌, வ‌ந்து அணைப்பாய் என ஏங்குகின்ற‌ன‌ ஒதுங்கி நின்று.


உன் உட‌ல் ந‌ல‌ம் குன்றி, ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்த‌போது, உன‌க்கு ப‌ணிவிடை செய்ய‌ நீ வ‌ழிவ‌குத்தாய்
நாங்க‌ளும் எங்க‌ள் அன்பை காட்ட‌ மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அளித்தாய்.

எங்க‌ள் ம‌ன‌தில் இன்ன‌மும் எவ்வ‌ள‌வோ செய்ய‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் இருந்த‌போது, நீ ஏன் எங்க‌ள் சேவையை இன்ன‌மும் ஏற்க‌ ம‌றுத்தாய்?
நாங்க‌ள் செய்த‌ ஏதாவ‌து த‌வறா? இல்லை த‌ன் குழ‌ந்தைக‌ளுக்கு என் நிலையிலும் க‌ஷ்ட‌ம் த‌ரகூடாது என்ற தாய்மை எண்ண‌மா?
உன் எண்ண‌ம் வென்ற‌து. எங்க‌ள் ம‌ன‌ம் க‌ன‌த்த‌து.


க‌டைசி கால‌த்தில், த‌ன் ம‌க்க‌ள் அனைவ‌ரும் கூட‌ இருப்ப‌தென்ப‌து சாமானிய‌ விஷ‌ய‌மில்லை.
உன‌க்கு ந‌ட‌ந்த‌து.. நீ செய்த‌ புண்ணிய‌மா? எங்க‌ளுக்கு கொடுப்பினையா?
க‌ஷ்ட‌த்தில் ஒரு ஆறுதல், இறுதிவ‌ரை கூட‌ இருந்த‌து.


வாழ்ந்த‌ கால‌த்தில் நீ காட்டிய‌ வ‌ழிக‌ள் ஏராள‌ம். உன் ம‌ர‌ண‌மும் எங்க‌ளுக்கு த‌ந்த‌து சில‌ ப‌ல பாட‌ங்க‌ள், சீர் அரிய வாய்ப்பான‌து -- ந‌ல்ல‌வ‌ர்க‌ள் யார், ந‌ம்பிக்கையான‌வ‌ர்க‌ள் யார், கூட வ‌ருப‌வ‌ர்க‌ள் யார், குற்ற‌ம் சொல்ப‌வ‌ர்க‌ள் யார், ந‌ண்ப‌ர்க‌ள் யார், ந‌ண்ப‌ர் போல‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் யார் என்ற‌ வ‌ழியில்

அருமையான‌ வாழ்க்கையின் ந‌டுவில், உன்னுட‌ன் அனுப‌விக்க‌ வேண்டிய‌வை ப‌ல‌ இருந்தாலும், முக்கிய‌மாக‌ --

காவிரி க‌ரை ஓர‌த்தில் திருவையாறு திருத்தலத்தில் தியாக‌ராஜ‌ உற்ச‌வ‌த்தின் நேர‌டி அனுப‌வ‌த்தை 10 நாளும் அமர்ந்திருந்து அனுப‌விக்க‌ நினைத்திருந்தேன்

ப‌த்தாயிர‌ம் ம‌க்க‌ள் ந‌டுவில் உன் ம‌க‌ன் புக‌ழ் கூறும் ந‌ன்னாளில், நீ தான் என் தாயென உரைக்க நினைத்திருந்தேன்

த‌னிபெரும் வீட்டினிலே திரும்பிய‌ ப‌க்க‌மெலாம் க‌ண்க‌வ‌ரும், ம‌ன‌ம் க‌வ‌ரும் ம‌ல‌ர்க‌ளுட‌ன் வாழ நினைத்திருந்தேன்

தேடி வ‌ரும் யாவ‌ருக்கும் ம‌ன‌ம் ம‌கிழ‌ விருந்தோம்ப‌ல் உன் மூல‌ம் செய்ய நினைத்திருந்தேன்

இருக்கும் நேர‌ம் எல்லாம் நாம் அனைவ‌ரும் ஒன்றாக‌ கூடி வாழ்க்கை அனுப‌விக்க நினைத்திருந்தேன்

கால‌ம் சில விரைய‌ம் செய்துவிட்டேன்.. க‌ன‌வுக‌ளை நினைவாக்க நேர‌ம் ஆகிவிட்ட‌து… கால‌ன் உன்னை அழைத்து விட்டான், என்ன‌ செய்வேன் இப்போது?
நினைத்த‌தெல்லாம் ந‌ட‌க்கும் என்றாலும், கூட‌ இருக்க நீ இல்லை

மூத்த ம‌க‌ன் என்று _ க‌ட‌மை செய்ய‌ சொன்னார்க‌ள்.
த‌வ‌ழ்ந்து வ‌ள‌ர்ந்த‌ உன் உட‌ல் மீது, அக்னி வைக்க சொன்னார்க‌ள்
கொடுமையா? க‌ட‌மையா ? எப்ப‌டி முடிந்த‌து? நினைத்து பார்க்க‌ முடிய‌வில்லை
ம‌ன்னித்து அருள்வாய் நீ ! தாய் அன்றோ நீ !

த‌ந்தை ம‌ர‌ண்த்தில் துக்க‌ம் அடைத்த‌ போது, துவ‌ளாம‌ல் நீ இருந்தாய், எங்க‌ளை தாங்கினாய்
நீ ம‌றைந்த‌ இப்போது யார் வ‌ந்து தாங்குவார்க‌ள்?
ஏற்றுக்கொண்டேன் முன்வ‌ந்து, உன் வ‌ழி ப‌ற்றி
வாய் விட்டு அழ‌முடிய‌வில்லை, ம‌ன‌திற்குள் குமுறுகிறேன்

நீ விட்டு சென்ற‌ இட‌த்தை முழுமையாக‌ இல்லாவிட்டாலும்
முடிந்த‌ அள‌வு நிறைக்க‌ முய‌ல்வேன் -- ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ள் குடும்ப‌த்தை எந்நாளும் உட‌னிருந்து காப்பேன்.

குறையொன்றும் காணாம‌ல் ஒன்றுப‌ட்டு வாழ்ந்திடுவோம்

காலை ம‌ணி 830 ஆனால், கை தானாக உன் எண்ணை dial செய்கிற‌து
பின்ன‌ர் தான் புரிகிற‌து answer ப‌ண்ண‌ நீ இல்லை என்று

நாட்க‌ள் 45 ஆனாலும், நெஞ்சம் மறக்க‌ வில்லை, வ‌லியும் குறைய‌வில்லை
இருந்த‌ போதும் உன்னிட‌ம் எப்போதும் கேட்பேன்

இப்போதும் கேட்கிறேன், எப்போதும் கேட்பேன்..

மேலிருந்து நீயும் த‌ந்தையும், எப்போதும் நாங்க‌ள் ந‌ல்ல‌ வ‌ழி ந‌ட‌ந்திட‌… ந‌ல் அருள் புரிய‌வேண்டும்
உரிமை அதிக‌முண்டு.... அத‌னால் சொல்கிறேன்
நீங்க‌ள் இருவ‌ரும் அருள் புரிந்தே ஆக‌வேண்டும்
வேண்டிய‌த‌ற்கு மேல் கொடுத்தே ஆக‌வேண்டும்
ந‌ல்வ‌ழி நோக்கி செல்ல‌, பாதை காட்டியே ஆக‌வேண்டும்

வ‌ண‌ங்கி நிற்கிறேன்
வாசு

எங்கள் பாட்டி -- Tribute by Sruthi, Vibha and all Grandchildren